விளையாட்டுகள்/கேளிக்கைகள் விளையாட அனுமதி உண்டா?


விளையாட்டுகள்/கேளிக்கைகள் விளையாட அனுமதி உண்டா?

இது தொடர்பாக பல்வேறு குறிப்புகளை என்னுடைய பதிலில் கூறுகிறேன்.

முதலாவதாக: கேளிக்கை என்பது அனுமதிக்கப்பட்டதாகும். எனினும், சில விதிவிலக்குகள் உள்ளன. யாராலும் அலுப்பும் களைப்பும் அடையாமல், எல்லா நேரமும் அல்லாஹுவை வணங்கி கொண்டே இருக்க இயலாது. ஆகையால், தனக்குத்தானே மகிழ்ச்சியும் திருப்தியும் கொடுத்துக் கொள்வது உரிமையாகும். எனினும், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கில் ஹலால் ஹராம் பேணாமல் இருப்பது ஏற்புடையது அல்ல. 

இரண்டாவதாக: சில விளையாட்டுகள் மார்க்கத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சில விளையாட்டுகள் ஜிஹாதிற்க்கு பயிற்சி அளத்து ஒருவரது தைரியத்தையும் உறுதிப்பாட்டையும் அதிகப்படுத்துகிறது. நீச்சல் , குதிரையேற்றம் மற்றும் வில்வித்தை போன்றவை நல்ல பொழுதுபோக்காகும். 

நபி ﷺ கூறியதாக ஸஹீஹ்ல் புஹாரில் குறிப்பிடபட்டுள்ளது:

ارْمُوا بَنِي إسْمَاعِيلَ فإنَّ أبَاكُمْ كانَ رَامِيًا

“இஸ்மாயீலின் சந்ததியினரே! வில்வித்தையில் சிறந்து விளங்குங்கள்! நிச்சயமாக உங்களுடைய தந்தை வில்வித்தையில் ஈடுபட்டவராக இருந்தார்.”

மூன்றாவதாக : பொதுவாக விளையாட்டு என்பது (கேளிக்கையோ விளையாட்டோ) ஜிஹாதிற்கு பயிற்சி அளிக்க வில்லை என்றாலோ அல்லது ஆதாரத்தின் அடிப்படையில் தடை செய்யப்பட்டாலோ - [உதாரணமாக சதுரங்கம்  ( chess ). மேலும் சில விளையாட்டுகளில் தடை செய்யப்பட்ட செயல்கள் உள்ளன]. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஒருவர் அவ்விளையாட்டில் இருந்து தவிர்ந்திருத்தல் வேண்டும். 

எனினும், ஒரு விளையாட்டில் தடை செய்தவையோ அனுமதிக்கப்படாதவையோ இல்லை என்றால் அதை விளையாடுவது அனுமதிக்கப்பட்டதாகும். உதாரணமாக கால்பந்து, கூடைப்பந்து போன்றவை. எனினும் சில நிபந்தனைகள் உள்ளன. அவ்விளையாட்டில் சூதாட்டம் இல்லாமல் இருத்தல் வேண்டும் , விளையாட்டில் ஈடுபட்டிருப்பதால் அல்லாஹுவை நினைவு கூறுவதை மறப்பது, அதிக நேரம் விளையாடுவதால் நேரம் விரயமாவது, இந்த நேரத்தை பயனுள்ள செயல்களில் ஈடுபடுத்துவது. இவை அனைத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

ஒரு விளையாட்டு ஆதாரப்பூர்வமாக ஹராம் என்று அறிவிக்கப்படும் அல்லது ஆதாரப்பூர்வமாக செய்யப்பட்ட கியாஸின் மூலமாக ஹராம் என்று அறிவிக்கப்படும் அல்லது விளையாட்டில் ஈடுபடுவதால் அல்லாஹ்வின் நினைவில் இருந்து விலகுவது அல்லது ஜமாஆத் தொழுகையில் இருந்து விலகுவது அல்லது சூதாட்டத்தின்பால் இட்டு செல்லுமானால் அல்லது ஷரியா தடை செய்யப்பட்ட காரியங்களை செய்தால்( ஆண் பெண் கலப்பது) விளையாட்டு ஹராம் என அறிவிக்கப்படும். 

நான்காவதாக: குறிப்பாக சில விளையாட்டுகளை பற்றி: இன்றைய காலத்தில்  பல இளைஞர்கள் சில விளையாட்டுகளுக்கு அடிமையாக உள்ளார்கள். தொலைக்காட்சி விளையாட்டுகள் , பிளே ஸ்டேஷன் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள். இதனுடைய விளைவுகளை பற்றி சிந்திப்பது முக்கியமாகும். 

நமக்கு தரப்பட்டுள்ள வாய்ப்புகளை நாம் மதிக்கிறோமா? அல்-இமாம் இப்னு ஜௌஸி رحمه الله தனது மகனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்:  நாம் தூங்கும் நேரம், சாப்பிட, குடிக்க , ஓய்வு எடுக்க, நாம் பருவ வயது அடையும் வரை உள்ள நேரத்தை கழித்தால், நம் வாழ்வில் மீதம் உள்ளது சிறிய நேரமே அல்லவா?

இந்த உம்மத்தின் சராசரி வயது 60 வருடம். அன்பு சகோதரா! நாம் அதிகம் விரும்பும் சொர்க்கம் எல்லா சந்தோஷங்களும் , ஓய்வும் அருளும் கிடைக்க நாம் எதிர்பார்த்து செலவு செய்ய வேண்டிய காலம் மிகவும் குறைவு அல்லவா?

15 வருடம் குழந்தை பருவத்திலும், தினமும் 8 மணிநேரம் தூக்கத்திலும் , உண்ண, பருக, குளிக்க, இயற்க்கை உபாதைகளுக்கு என்று 3 மணி நேரம். ஒரு மனிதனின் வாழ்நாள் 60 வருடம் எனில் இன்னும் எத்தனை நேரம் மீதம் உள்ளது? சொர்க்கத்தை அடைய உழைக்க எவ்வளவு காலம் மீதம் உள்ளது?

இப்படி உள்ள நபர் கேளிக்கை குறித்து கூறுவாரா?


எனவே, தன் வாழ்வை பயனற்ற வீணானதில் போக்குபவன், நேரத்தின் அருமையை அறியாதவன் எத்தகைய துரதிர்ஷ்டசாலி?

தன்னுடைய நேரத்தை எவ்வாறு செலவிடுகிறோம் என்ற கவலை இல்லாமல் இருப்பவரை பற்றி அல்-இமாம் இப்னு அல் கையும் رحمه الله கூறினார்கள்: “ உண்மையில் நேரம் தான் ஒரு மனிதனின் வாழ்க்கை. மறுமை வாழ்க்கைக்காக செலவிடுதலே உண்மையான பாக்கியம். ஒரு மனிதன் தவறான கனவிலும் , தனது வாழ்க்கையை தூக்கத்திலும் பயனற்ற செயல்களிலும் செலவிடுவானே ஆனால் , அந்த மனிதன் வாழ்வதை விட மரணிப்பதே அவருக்கு சிறந்ததாகும். ( அல்-ஜவாப் அல்-காஃபி)

இதற்கு காரணம் இந்த மனிதர் வாழ்வாரே ஆனால் அல்லாஹ்விடம் இருந்து தூரம் சென்று விடுவார். 

அல்-இமாம் இப்னு அல்- கையும் رحمه الله மேலும் கூறினார்கள்,” இந்த வாழ்க்கையில், ஒருவர் மறுமைக்கு பயணம் உள்ள காரியங்களில்  தனது வாழ்வை செலவு செய்வதே மிகச்சிறந்தது ஆகும். 

அல்-இமாம் அல்-அல்லாமா இப்னு பாஸ் رحمه الله கூறினார்கள் : நேரம்தான் வாழ்க்கை. எவர் ஒருவர் அதை விரயம் செய்தாரோ அவர் வாழ்க்கையை விரயம் செய்து விட்டார். வாழ்க்கையை வீணாக்கினால் வருந்துவீர்கள். இப்படி வருந்துவது அவருக்கு பலன் அளிக்காது” ( பத்வா 261/16).

அல்-இமாம் அல்-அல்லாமா அல்-உதைமீன் رحمه الله கூறினார்கள் : “ எனதருமை சகோதரா! இவ்வுலக வாழ்வை பாதுகாப்பாயாக! அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஒரு மனிதனின் வாழ்வு தங்கம் வெள்ளியை விட மதிப்புமிக்கதாகும். ஒரு திர்ஹம் கூட வீணாக்க விரும்பாதவன், தன்னுடைய முழு வாழ்வை ஏன் வீணாக்குவான்?” (அல்- லிக்கா அஷ்-ஷாஹ்ரீ 72).
 மேலும் அவர், அல்-இமாம் அல்-அல்லாமா அல்- உதைமீன் رحمه الله மேலும் கூறினார்கள்: “ நம் வாழ்வை நாம் நல்ல காரியங்கள் செய்வதில் செலவு செய்ய முடியவில்லை என்றால், நாம் உலக வாழ்வையும் மறுமையையும் இழந்து விட்டோம்.” ( அக்-காஃபி அஷ்-ஷாஃபியா 380-4)

ஆச்சரியத்திற்க்கு உரியது என்னவென்றால், இன்றைய முஸ்லிம் குழந்தைகளுக்கு மிகுதியான நேரம் இருக்கிறது, கேளிக்கை என்ற பெயரில் பலவித காரியங்களில் ஈடுபடுவதை தவிர வேறு செய்வதற்கு எதுவும் இல்லை. 

அன்பு சகோதரா! இதை சிறிது யோசிப்பீராக! அன்பான ஞானமுடையவர்களே! இதில் இருந்து பாடம் பெறுவோம். 70 அல்லது 80 வருடம் இவ்வுலகில் வாழ்ந்தவர், இந்த பூமியை விட்டு செல்லும் பொழுது இவ்வாறு கூறுவார் :

அல்லாஹ் கூறுகிறான்:

قالُوا لَبِثْنا يَوْماً أَوْ بَعْضَ يَوْمٍ فَيْئَلِ الْعادِّينَ

அ(தற்க)வர்கள்,”ஒரு நாள், அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் தங்கியிருந்திருப்போம்; (ஆகவே) கணக்கு வைத்திருப்பவர்களை நீ கேட்பாயாக!” எனக் கூறுவார்கள். 

நமக்கு எவ்வளவு குறைந்த காலம் இருக்கிறது என்றும் நம் வாழ்க்கை உண்மையில் எவ்வளவு சுருங்கியது என்றும் நாம் உணர்கிறோமா? 

மேற்கூறிய அனைத்தையும் குறித்து நான் கூறுகிறேன், ஒரு உஸ்தாதாக வீடுகளுக்கு விஜயம் செய்யும் பொழுது, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு அறிவுரை கூற அழைக்கும் பொழுது , அவர்கள் கூறும் புகார்கள் என்னவென்றால் தங்களது குழந்தைகள் விளையாட்டில் மூழ்கி இருக்கிறார்கள் என்பது தான். இதில் எவ்வளவு ஈடுபடுகிறார்கள் என்றால் இரவு தூக்கத்தை தொலைத்து விளையாடுகிறார்கள். வேறு எதுவும் செய்வதற்கு இவர்களுக்கு நேரம் இருக்காது. பகலில், அந்தி பொழுதில், இரவில் என இதில் ஈடுபடுகிறார்கள். இக்குழந்தைகள் எவ்வாறு தொழுகைக்கு எழுவார்கள்.? தொழுகையின்பால் என்ன ஆர்வம் இருக்கும்.?

இந்த விளையாட்டுகள் மூலம் கிடைத்த ஒரே ஒரு பலனை கூறுங்கள்! ஒரே ஒரு விசயம்! அல்லாஹ்வின் மீது ஆனணயாக! இது உங்களையே அழிவில் எறிவதாகும். இது உங்களுக்கு நீங்களே துயரத்தையும் கவலையையும் ஏற்படுத்துவது ஆகும். இது உங்கள் பாகத்தில் இருந்து உள்ள மிகப்பெரிய புறக்கணிப்பு ஆகும். உங்களை கடமையிலிருந்து வழி தவற செய்து விடும். மேலும் அவன் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளை நீங்கள் வீணாக்குகிறீர்கள். இவ்வாறு செயல்படுவது அவனுடைய அருட்கொடைகளை அப்படி ஒன்றே இல்லாதது போன்று புறக்கணிப்பதாகும். யாரையும் எந்த குழந்தைகளையும் இந்த விளையாட்டுகள் விளையாட அறிவுறுத்த மாட்டேன். தற்காலத்தில் குழந்தைகள் விளையாடும் சில விளையாட்டுகள் ஹராமானவை. ஏனெனில் இதில் ஷிர்க் மற்றும் குஃப்ர் உள்ளடங்கி இருக்கிறது. விளையாட்டில் பலம் பெறுவதற்க்கு, அதில் உள்ள பாத்திரங்கள் சிலைகளிடம் சென்று குனிந்து தங்களை அற்பணிக்கின்றன. அல்லாஹுவின் மீது ஆனணயாக! இச்செயல்கள் நிச்சயமாக தடை செய்யப்பட்டவை ஆகும். 

இது குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் பேராபத்தாக ஆகிவிட்டது. இவ்விளையாட்டுகள் அவர்களுடைய வாழ்வை அழிவின் பாலும் துயரத்தின்பாலும் இட்டுச்செல்லும். இக்கூற்றை , புத்தி சுவாதீனம் உள்ள எவரும் எதிர்க்க மாட்டார்கள். 

அன்பு சகோதரரே! உங்களது வாழ்க்கையை பற்றி சிந்தியுங்கள்! உங்கள் வயது பற்றியும் உங்கள் வாழ்வை எவ்வாறு செலவு செய்தீர்கள் உங்கள் நேரத்தை எவ்வாறு செலவு செய்தீர்கள் என்பதை பற்றியும் கேட்கப்படுவீர்கள். அந்த நாளில் “நான் பொழுது போக்கில் செலவிட்டேன் “ என்று கூற முடியுமா?

எனது அறிவுரை சுன்னாவின் அறிஞர்கள் ( ஸலஃபி) புத்தகங்களையும் அவர்கள் சொற்பொழிவையும் கேட்பதில் நேரத்தை செலவு செய்யுங்கள். அந்த அறிவை கற்பது வணக்க வழிபாடாகும் மேலும் உங்கள் உள்ளத்திற்கு அபரிதமான சந்தோஷத்தையும் மனநிறைவையும் தரும். மேலே குறிப்பிடப்பட்ட அனுமதிக்கப்பட்ட விளையாட்டுகளில் ஈடுபடலாம். அப்படியான பல விளையாட்டுகள் உள்ளன.

தமிழில் அபூ முஹம்மது அபூபக்கர் கோவை

Comments